மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
|ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.
ராமநாதபுரம்,
மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில நடந்த திமுக பொதுக்கூட்டத்தில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள். ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.
நீட் விவகாரத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது.
நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.