பெரம்பலூர்
கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 20,650 பேர் பயனடைந்துள்ளனர்
|கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 20,650 பேர் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 17 இயக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு வாகனம் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்சும், 2 அட்வான்ஸ் லைப் சப்போர்ட் அதிநவீன ஆம்புலன்சுகளும் அடங்கும். இதில் 70-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் 108 ஆம்புலன்சுகள் இயக்கப்பட்டு இருக்கின்றன. 108 என்று அழைத்தால் சென்னையில் உள்ள கால் சென்டருக்கு சென்று பின்னர் அங்கிருந்து அந்தந்த மாவட்டத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நோயாளி இருக்கும் இடத்திற்கு சராசரியாக 13 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வந்து சேருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த ஆண்டு 20,650 பேர் பயன் பெற்றுள்ளனர். அதில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 3,555 பேரும், கர்ப்பிணி பெண்கள் 4,876 பேரும் பயனடைந்ததுடன், அதில் 25 கர்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட 108 அம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.