சுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை: தமிழக காங்கிரஸ் கண்டனம்
|ஆற்றல் மிக்கவராக ராகுல் காந்தி செயல்படுவதை பாஜக அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி மத்திய பாஜக அரசு அவமதித்துள்ளது. ஒலிம்பிக் வீரர்களை கௌரவப்படுத்த அவர்களை முன் வரிசையில் அமர்த்தியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா, ஜெய்சங்கர், நட்டா ஆகியோர் ஒலிம்பிக் வீரர்களை மதிக்கவில்லை.
மல்லிகார்ஜுன கார்கேவின் இருக்கை கூட 5வது வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. இது வெட்கக்கேடான நடத்தை. ராகுல் காந்திக்கு இது ஒரு பொருட்டல்ல. ஜனநாயகத்தில் ஆற்றல் மிக்கவராக ராகுல் காந்தி செயல்படுவதை சகித்துக்கொள்ள முடியாத மோடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.