< Back
மாநில செய்திகள்
கடைசி நேர ஷாப்பிங்: சென்னை கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
மாநில செய்திகள்

கடைசி நேர ஷாப்பிங்: சென்னை கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தினத்தந்தி
|
23 Oct 2022 4:28 PM IST

நாளை தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி சென்னையில் உள்ள கடைவீதிகள் மக்கள்கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடியதை போன்று இந்த வாரமும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகளை உற்சாகத்தோடு வாங்கி சென்றனர்.

இன்று தீபாவளிக்கு முந்தைய கடைசி நாள் என்பதால் தி.நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் காலையிலேயே சென்று தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கியதை காண முடிந்தது. இதனால் கடை வீதிகளில் கூட்டம் களைகட்டி காணப்பட்டன. நேரம் செல்ல செல்ல... இந்த கூட்டம் அதிகமானது.

பிற்பகலில் கடைவீதிகள் அனைத்திலும் திருவிழா கூட்டம்போல காணப்பட்டது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தி.நகர் ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் அதிகளவில் காணப்பட்டனர். அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள், சுவீட் ஸ்டால்கள், பட்டாசு கடைகள் ஆகியவற்றிலும் மக்கள் திரண்டு இனிப்பு வகைகளையும், பட்டாசுகளையும், புத்தாடைகளையும் வாங்கி மகிழ்ந்தனர்.

பாண்டிபஜார் பகுதியில் உள்ள சாலையோர கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கடைகளில் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அதிகமாக காணப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கினர். புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளிலும் தீபாவளி கூட்டம் அலைமோதியது. அங்குள்ள டாணா தெருவில் பூக்களின் விற்பனையும் அதிகரித்திருந்தது. சாலையோர கடைகளில் பூ, பழங்கள் மற்றும் தோரணங்களையும் மக்கள் வாங்கினார்கள். பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய வணிக பகுதிகளிலும் மக்கள் திரண்டு தேவையான தீபாவளி பொருட்களை வாங்கி குவித்தனர்.

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடு பிடித்து காணப்பட்டது. அங்கு மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து மக்கள் விதவிதமான பட்டாசுகளை வாங்கி சென்றனர். சென்னை மாநகர் முழுவதும் ஏராளமான பட்டாசு கடைகள் அணிவகுத்து உள்ளன. இந்த கடைகளில் பட்டாசுகளுடன் சிறுவர்கள் பயன்படுத்தும் 'பொட்டு வெடி' துப்பாக்கி விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.

இந்த ஆண்டு புதிது புதிதாக பட்டாசுகள், விற்பனைக்கு வந்திருந்தன. அவைகளை தேடி பிடித்தும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இப்படி பட்டாசுகள், துணி வகைகள், இனிப்பு மற்றும் கார வகைகள் ஆகியவற்றின் விற்பனை சென்னை முழுவதுமே மும்முரமாக நடைபெற்றது. தீபாவளியையொட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவை சேர்ந்த 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், 12 மோப்ப நாய்கள் மற்றும் அதன் பயிற்றுநர்களுடன் முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேடு, தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

நாளை வரை தினசரி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நடைபெறும் எனவும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் இச்சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்