சிவகங்கை
ஆடி மாத கடைசி வெள்ளி: மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
|ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புவனம்
ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில்
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும், மற்ற நாட்களில் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெறும்.
தமிழ், ஆங்கில வருட பிறப்புகள் மற்றும் ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதே போல் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று இரவு பத்திரகாளி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனப்பொடி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்தும், பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். அது சமயம் பயபக்தியுடன் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வார்கள்.
ஆடி கடைசி வெள்ளி
நேற்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவிலில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக மடப்புரம் செல்லும் விலக்கு அருகே ஆட்டோ மற்றும் கார் போன்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு பக்தர்கள் இறங்கி நடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால் அரை கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலின் உள்ளே கட்டண தரிசனம், இலவச தரிசனம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் நடைபெறும் உச்சிக்கால பூஜையின் போது பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடினர். மேலும் காலையிலிருந்தே பக்தர்கள் எலுமிச்சம்பழ மாலை, சேலைகள் அணிவித்து அம்மனை வழிபட்டனர்.
சிறப்பு பஸ்கள்
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் மானாமதுரை துணை சூப்பிரண்டு(பொறுப்பு) பிரகாஷ் அறிவுறுத்தலின்படி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.