மணப்பாறை அருகே மீன்பிடி திருவிழாவில் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு
|மணப்பாறை அருகே செவலூரில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரில் 120 ஏக்கர் பரப்பளவில் செவக்குளம் உள்ளது. மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் செவக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்திருந்த நிலையில் அதில் அதிள அளவில் மீன்களும் இருந்தது. இந்நிலையில் தற்போது நீர் இருப்பு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி காலை ஊர் முக்கியஸ்தர் துண்டை வீசி தொடங்கி வைக்க, மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர்.
இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, கெண்டை, விறால், ஜிலேபி, கட்லா ஆகிய மீன் வகைகள் கிடைத்தன. இதனால் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றனர்.