கள்ளக்குறிச்சி
கல்வராயன் மலையில் தொடர் மழை: சேராப்பட்டு சாலையில் மண்சரிவு பாறைகள் உருண்டு விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சம்
|கல்வராயன் மலையில் பெய்த தொடர் மழையால், சேராப்பட்டு சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாறைகள் உருண்டு விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மலை பகுதியில் உள்ள சாலைகள் பல்வேறு இடங்களில் சேதடைந்துள்ளது.
இதில், புதூர் வழியாக சேராப்பட்டு செல்லும் சாலையில் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையில் பெரும் பகுதி அரிப்பு ஏற்பட்டு மண்சரிந்த நிலையில் காணப்படுகிறது. மண் சரிவானது சாலையின் வளைவு பகுதியில் அமைந்து இருப்பதால், பெரும் விபத்துகள் நிகழும் அபாயம் நீடிக்கிறது.
தற்காலிகமாக அந்த பகுதியில் மரக்கிளைகளை போட்டு தடுத்து வைத்து இருக்கிறார்கள். இருப்பினும் இரவு நேரங்களில் ஏதேனும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவில் சென்றால், பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும்.
உருண்டு விழும் பாறைகள்
இதேபோன்று, அந்த பகுதியில் மலையில் உள்ள பாறைகள் உருண்டு விழுந்தும் சாலை மற்றும் தடுப்பு சுவரை உடைத்தும் சேதப்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அஞ்சுகிறார்கள். மேலும், இந்த சாலையை சார்ந்து தான், மலை கிராம மக்கள் இருக்கிறார்கள். எனவே தொடர் மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில், மேற்கொண்டு மண் சரிவு அதிகரித்து சாலை துண்டிக்கும் நிலை ஏற்படும் சூழல் உள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால், மலை கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகள் முழுவதும் முடங்கிபோய்விடும். இதை கருத்தில் கொண்டு சாலையை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.