< Back
மாநில செய்திகள்
நீலகிரியில் மண்சரிவு: பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
மாநில செய்திகள்

நீலகிரியில் மண்சரிவு: பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

தினத்தந்தி
|
30 Sept 2024 1:49 PM IST

நீலகிரியில் மண்சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூரில் ஆங்காங்கே சாலையோரம் இருந்த மரங்கள் மின்கம்பியில் சாய்ந்தபடி முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்சாரம், சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

இதற்கிடையே கனமழையின்போது குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த தனியார் பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி மண் சரிவில் சிக்கிக்கொண்டார். இதனால் செய்வதறியாது திகைத்த ஜெயலட்சுமி சத்தமிட்டு கூச்சலிட்டார். மனைவியின் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த அவரது கணவர் ரவி, மகள்கள் வர்ஷா, வையூ ஆகியோர் வெளியே வந்தனர். ஆனால் அவர்களும் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து மண் சரிவில் சிக்கி கொண்ட ஆசிரியையின் கணவர், 2 மகள்களை உயிருடன் மீட்டனர்.

எனினும் மண் சரிவில் சிக்கிய ஜெயலட்சுமி மூச்சுத்திணறி மண்ணுக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்பு படையினர் அவரது உடலை 3 மணி நேரம் போராடி மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்