நிலவில் நகர்த்தப்பட்ட லேண்டர் - இஸ்ரோ தகவல்
|நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் முதன் முறையாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சென்னை,
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது. தற்போது ரோவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்த நிலையில், நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் முதன் முறையாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்து 30 முதல் 40 செ.மீ உயரம் வரை பறந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பாக நகர்த்தப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கிக் ஆன் ஸ்டார்ட் என்ற இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் லேண்டரில் உள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இந்த சோதனை மூலம் எதிர்காலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் புதிய நம்பிக்கை கிடைத்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் விக்ரம் லேண்டர் நகர்த்தப்பட்ட வீடியோவை இஸ்ரோ தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.