நீலகிரி
நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
|கூடலூரில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூரில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திரப்பதிவு செய்ய தடை
நீலகிரி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.சி.பி.) லே அவுட் என்ற விதிமுறைகளை அமல்படுத்தி சாமானிய மக்களின் நிலங்களை விற்பனை மற்றும் அடமானம், தானம் உள்ளிட்ட காரணங்களுக்கு பதிவு செய்ய தடை விதித்து உள்ளதை கைவிட வேண்டும். பதிவுத்துறை தலைவர் தலைமையில் கூடலூரில் 2 நாட்கள் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தி நிலம் பத்திரப்பதிவு பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கு குறைவான நிலங்களை தவறுதலாக சேர்த்துள்ளதை கண்டறிந்து தடையில்லாமல் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழு சார்பில், கூடலூர் காந்தி திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் இப்னு தலைமை தாங்கினார். செயலாளர் ஜைனுல் பாபு, பொருளாளர் சந்திரன், ஒருங்கிணைப்பாளர் அகமது யாசின் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வாசு, ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் சகாதேவன் உள்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ.-வை சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.
இதுகுறித்து நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் கூறும்போது, டி.டி.சி.பி. ஒப்புதல் பெற வேண்டுமென பத்திரப்பதிவு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 3 சென்ட் முதல் நிலம் பத்திரப்பதிவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 2016-ம் ஆண்டு முதல் பதிவு செய்த நில பத்திரங்கள் செல்லாது என கூறப்படுகிறது. எனவே, பத்திரப்பதிவு செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.