சேலம்
ரூ.2 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலம் மீட்பு
|சங்ககிரி அருகே ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த 127 தென்னை, 1,000 வாழைகள் அழிக்கப்பட்டு ரூ.2 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
சங்ககிரி
ஏரி ஆக்கிரமிப்பு
சங்ககிரி அருகே இருகாலூர் ஊராட்சியில் உள்ள புது ஏரி 27ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியை ஆக்கிரமித்து சில விவசாயிகள் தென்னை, வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டிருந்தனர். இதுகுறித்து சங்ககிரி தாசில்தார் பானுமதிக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் விசாரணை நடத்தி ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய தாசில்தார், சங்ககிரி கிழக்கு வருவாய் ஆய்வாளர் ராஜூ, சங்ககிரி வட்ட துணை சர்வேயர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அதிகாரி சாந்தி ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
5 ஏக்கர் மீட்பு
இந்த உத்தரவின்பேரில் வருவாய் துறை அதிகாரிகள் நிலஅளவீடு செய்தனர். அப்போது ரூ.2 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் பரப்பளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு தென்னை, வாழை பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அகற்ற தாசில்தார் பானுமதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து தலைமையில், இருகாலூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா மற்றும் வருவாய்த் துறையினர் புது ஏரிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த 127 தென்னை, 1,000 வாழை மரங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழித்தனர். இதனால் 5 ஏக்கர் பரப்பிலான ரூ.2 கோடி மதிப்புள்ள ஏரி புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது.