திருநெல்வேலி
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி; 3 பேர் கைது
|பாளையங்கோட்டையில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை திருமால்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவருக்கு சொந்தமான 50 சென்ட் நிலம் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜவேல் என்பவர் சிலருடன் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக முருகன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோர் விசாரணை நடத்தி, போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக ராஜவேல் (86), என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த நம்பி (60), ரெட்டியார்பட்டியை சேர்ந்த பகவான் ரெட்டியார் (70) மற்றும் சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராஜவேல், நம்பி, பகவான் ரெட்டியார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.