நிலத்தை சேதப்படுத்திய வழக்கு: செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்
|நிலத்தை சேதப்படுத்திய வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர் ஆனார். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26-ந்தேதிக்கு கோர்ட்டு ஒத்தி வைத்தது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயரிழந்த ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் அந்த கட்சியின் தொண்டர்கள் வீரவணக்கம் செலுத்தினார்கள்.
அப்போது பக்கத்து நிலமான தீபன் சக்ரவர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக தீபன் சக்ரவர்த்தி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் திருமாவளவன் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் - 1 ல் வழக்கு தொடர்ந்தனர்.
திருமாவளவன் ஆஜர்
திருமாவளவன் மட்டும் முன்ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில் மற்ற 12 பேரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர். இந்த வழக்கின் விசாரணை மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதால் வழக்கில் தொடர்புடைய 14 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று மாலை வழக்கு விசாரணைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆஜரானார். வழக்கில் தொடர்புடைய 14 பேருக்கும் வழக்கின் நகல்கள் வழங்கப்பட்டன. பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26-ந்தேதிக்கு ஒத்தி வைத்தும், இது தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட கோர்ட்டில் நடைபெறும் என்றும் மாஜிஸ்திரேட்டு ரீனா உத்தரவிட்டார். கட்சியின் மாநில வக்கீல்கள் அணி செயலாளர் பாவேந்தன், செங்கல்பட்டு கோர்ட்டு முன்னாள் பார் சங்க தலைவர் சொக்கலிங்கம் ஆஜரானார்கள். இதையடுத்து திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டு கோர்ட்டு முன்னாள் பார் சங்க தலைவர் சொக்கலிங்கம் ஒரு பவுன் தங்க நாணயமும், புத்தர் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட மையச்செயலாளர் செங்கை தமிழரசன் தலைமையில் கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.