திருவாரூர்
நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது
|திருவாரூர் மாவட்டத்தில், தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
மன்னார்குடி;
திருவாரூர் மாவட்டத்தில், தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
வேலை வாய்ப்பு முகாம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில்தேர்வான இளைஞர்களுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பணி நியமன ஆணையை வழங்கினார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை சோழராஜன், நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ் செல்வன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.
ெதாழிற்பேட்டை
முகாமில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப பணப்பயிர்கள் விளைகின்றன. அதற்கு ஏற்ப குறிப்பிட்ட பகுதிகளில் விளையும் பயிர்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்ய வசதியாக தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் டெல்டா பகுதியான திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கோல், நெல் சார்ந்த பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கு ஏற்ற நிறுவனங்கள் வந்தவுடன் முதற்கட்டமாக சிறிய அளவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். அதன் பின்னர் பெரிய அளவிலான தொழிற்பேட்டை நிச்சயம் அமையும். முன்னதாக தொழிற்பேட்டை அமைப்பதற்கு தேவையான நிலம் கையகப்படுத்துவது குறித்த தொடக்க கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
நிவாரணத்தொைக
தமிழக முதல்-அமைச்சர் டெல்டாகாரர் என்பதால் விவசாயிகளின் நிலை குறித்து நான் முதல்வருக்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. விவசாயிகளுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் தமிழக முதல்வர் தான். 2-வதாக நான்(டி.ஆர்.பி.ராஜா) குரல் கொடுப்பேன். நிவாரணத் தொகை குறித்து பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வருகிறது.இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்.
நோட்டாவுடன் போட்டி
மன்னார்குடி அரசு கல்லூரியை மேம்படுத்த வேண்டும். கல்லூரியில் நூலகம் அமைக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளில் 99 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார்குடி கர்த்தநாதபுரம் பாலம், புது பாலம், நீடாமங்கலம் மேம்பாலம் என பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியை மாவட்டமாக மாற்றுவது குறித்து தமிழக முதல்- அமைச்சாின் செவிக்கு எட்டும் படி ஏற்கனவே கூறி இருக்கிறேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நோட்டாவுடன் பா.ஜனதா கட்சி போட்டியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.