மதுரை
கோவில் குளங்கள் அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதா?
|கோவில் குளங்கள் அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதா? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்விகேட்டு உள்ளது.
தஞ்சாவூர் ஆலங்குடியை சேர்ந்த செல்வராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சாவூர் அருகே ஆலங்குடி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் குளத்தில் நீர் தேக்கி வைக்க முடியாததால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மாரியம்மன் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் வக்கீல் ஆஜராகி, கோவிலுக்கு சொந்தாமான குளத்தை வருவாய்த்துறையினர் அரசு புறம் போக்கு நிலத்தில் உள்ள குளம் என வகைப்பாடு செய்து உள்ளனர். இதனால் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எங்களால் முடியவில்லை என்றனர்.
இதை தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான குளங்களை எதன் அடிப்படையில் அரசு புறம்போக்கு என வகைப்படுத்தினர், தமிழகம் முழுவதும் இது போன்று கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், அரசு புறம் போக்கு என வகைப்படுத்தப்பட்டு உள்ளதா? என்று தமிழக அரசின் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.