திருப்பூர்
விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்
|குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பருவமழை கைகொடுக்குமா? என்ற ஏக்கத்தில் விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பருவமழை கைகொடுக்குமா? என்ற ஏக்கத்தில் விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாசனத் திட்டங்கள்
குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு பி.ஏ.பி., அமராவதி வாய்க்கால் பாசனம், இறவைப்பாசனம், சொட்டுநீர்ப் பாசனம் என பலவிதமான பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுதவிர வான்மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வானம் பார்த்த பூமிகள் அதிக அளவில் உள்ளன.
இந்தநிலையில் நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தென்மேற்குப் பருவமழையும் கைவிட்ட நிலையில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு நிலைப்பயிர்களான தென்னை, பாக்கு போன்றவற்றை காப்பாற்றவே போராடும் நிலை உள்ளது. மழை வரும் என்ற நம்பிக்கையில் ஒருசில விவசாயிகள் உழவுப் பணியை தொடங்கியுள்ளார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
'வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்குப் பருவமழைக் காலமாக இருக்கும். ஆனால்கடந்த சில ஆண்டுகளாக பருவநிலையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
வெப்பத்தின் தாக்கம்
தென்மேற்குப் பருவமழையால் வட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும் இந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வழக்கமாக தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை கைவிடும் காலங்களிலும் கேரளாவில் பருவமழை பொழிவு திருப்திகரமாக இருக்கும். அதனால் திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து விவசாயிகளுக்கு கைகொடுக்கும். ஆனால் தற்போது கேரளாவிலும் பருவமழை கைவிட்டநிலையில் கடும் வறட்சியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நிலைப்பயிர்களான தென்னை, பாக்கு போன்றவற்றை காப்பாற்றவே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வட மாநிலங்களில் பருவமழை கொட்டித் தீர்த்த நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.ஆனால் இங்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. ஆனாலும் மனதை தளர விடாமல் உழவு செய்து நிலத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஏனென்றால் நாங்கள் விவசாயத்தை வெறும் தொழிலாக மட்டும் பார்ப்பதில்லை'.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.