< Back
மாநில செய்திகள்
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில செய்திகள்

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

தினத்தந்தி
|
7 Jan 2023 10:10 AM IST

பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 2.26 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலை 6 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அம்மணி அம்மன் கோபுர வாசலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணி வரை இருந்ததால் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும் செய்திகள்