சென்னை பள்ளிக்கரணையில் பிங்க் நிறத்தில் ஏரி; மக்கள் அதிர்ச்சி
|சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பிங்க் நிறத்தில் காணப்பட்ட ஏரியால் அப்பகுதி வாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னை,
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சதுப்பு நிலம் அருகே அமைந்த ஏரி ஒன்றில் நீரானது பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிப்போரின் கவனம் ஈர்த்தது.
சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி பல ஆண்டுகளுக்கு முன் குப்பை போடும் பகுதியாக இருந்துள்ளது. அதில், உயிரி கழிவுகள், மருத்துவ மற்றும் ரசாயன கழிவுகளும் கொட்டப்பட்டு வந்துள்ளன. இதனால் மீத்தேன் உற்பத்தியாகி உள்ளது. இதனால், சமீபத்தில் இந்த குப்பை கிடங்கில் பெரிய அளவில் தீப்பற்றி எரிந்த சம்பவமும் நடந்தது.
இந்நிலையில், ஏரியின் வண்ணம் உருமாறியதற்கு ஆல்கே எனப்படும் பூஞ்சைகள் வளர்ந்திருப்பதே காரணம் ஆக இருக்க கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த ஏரியில் சையனோ பாக்டீரியா வளர்ச்சி அடைந்து, அதனால் நிறம் மாறியிருக்க கூடும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அந்த ஏரியை ஆளில்லா விமானம் ஒன்றின் உதவியுடன் மேலிருந்து படம் பிடித்து உள்ளனர். அதில், அந்த ஏரி பளிச்சென்ற பிங்க் வண்ணத்தில் காட்சியளிக்கிறது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பணியாளர்கள் ஏரியில் இருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர்.
பிராணவாயு குறைவான சூழல் மற்றும் மீத்தேன் உருவாக்கம் ஆகியவற்றால் அழுகும் நிலை ஏற்பட்டு சையனோ பாக்டீரியா போன்ற உயிரினங்களுக்கு ஏதுவான சுற்று சூழல் உருவாகி இருக்க கூடும் என அவர்கள் நம்புகின்றனர்.
சிவப்பு ஆல்கேவில் காணப்படும் ஒரு வகை சிவப்பு நிற பைக்கோஎரித்ரின் என்ற புரத வகையை சேர்ந்த ரசாயனம் நீல நிற ஒளியை உள்வாங்கி சிவப்பு ஒளியை பிரதிபலிக்கும். நீரின் ஆழத்தில் வசிக்கும் அந்த பூஞ்சைகளுக்கு அவை அடர் சிவப்பு வண்ணம் அளிக்கிறது.
இந்த பைகோஎரித்ரின் வகை சிவப்பு புரதத்தினால் ஏரி பிங்க் வண்ணத்தில் காட்சி அளிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே பிற விவரங்கள் தெரிய வரும்.
ஆனால், பள்ளிக்கரணை பகுதி மக்கள், நச்சு பொருட்களை வெளியிடும் சையனோ பாக்டீரியாவால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்பட கூடும் என்றும் அச்சம் தெரிவித்து உள்ளனர்.