திருப்பத்தூர்
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
|தோப்பலகுண்டா ஊராட்சியில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தோப்பலகுண்டா ஊராட்சியில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
இதில் வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 381 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதியாக இருப்பின் விரைவாக தீர்வு காண உத்தரவிட்டார்.
அப்போது ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், துத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பழையமனை, புதுமனை, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் பாலாற்றங்கரையோரம் உள்ள பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில், பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் மனித உடல்கள் மயானப்பகுதியில் புதைக்காமல் பாதையில் புதைக்கின்றனர்.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்த பாதையை பயன்படுத்த முடியவில்லை. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லவே அச்சமாக உள்ளது.
எனவே, ஆற்றுப்பகுதியில் உயிரிழந்தவர்களின் பிணத்தை எரிக்காமலும், புதைக்காமல் இருக்கவும், ஆற்றுப்பகுதியில் எரிமேடை அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏரி ஆக்கிரமிப்பு
தோப்பலகுண்டா ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த மனுவில், ''தோப்பல குண்டா ஊராட்சியில் 14 ஏக்கரில் ஏரி உள்ளது.
ஏரியை ஆக்கிரமித்து நடுவில் சாலை அமைத்துள்ளனர். மேலும் ஏரிக்கு வரும் கால்வாய் கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி கவுன்சிலர் இல.குருசேவ் அளித்துள்ள மனுவில் நஞ்சை நிலத்தை பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். அதனை சுற்றி அனைத்து நிலங்களும் விவசாய நிலமாக உள்ளது.
இதனால் விவசாயம் பாதிக்கும். இதனை நேரடியாக பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.