< Back
மாநில செய்திகள்
தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும்  எஸ்.வாழவந்தி ஏரியில் மராமத்து பணிகள் நடைபெறுமா?  விவசாயிகள் எதிர்பார்ப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் எஸ்.வாழவந்தி ஏரியில் மராமத்து பணிகள் நடைபெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
22 Oct 2022 12:15 AM IST

தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் எஸ்.வாழவந்தி ஏரியில் மராமத்து பணிகள் நடைபெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மோகனூர்:

தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் எஸ்.வாழவந்தி ஏரியில் மராமத்து பணிகள் நடைபெறுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பயனற்று கிடக்கும் ஏரி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 184 ஏக்கர் பரப்பளவு கொண்ட எஸ்.வாழவந்தி ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி எஸ்.வாழவந்தி, சின்னகரசப்பாளையம், மேலப்பட்டி, கு.ராசாம்பாளையம், பொன்னேரிப்பட்டி, வேட்டுவம்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன.

இந்த ஏரியில் தண்ணீர் தேங்கினால் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, விவசாயம் செழிக்க வழிவகுக்கும். மேலும் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடும் இருக்காது. ஆனால் எஸ்.வாழவந்தி ஏரியின் தற்போதைய நிலையோ முற்றிலும் மாறாக உள்ளது. மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டிய ஏரி தற்போது தண்ணீரின்றி பயனற்று கிடக்கிறது.

குண்டும், குழியுமானது

இதனிடையே விவசாய நிலங்களை மேம்படுத்தி கொள்ளவும், ஏரியை மேம்படுத்தும் வகையிலும் ஏரியில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. அதன்படி ஒரு ஏக்கருக்கு 25 டிராக்டர் வண்டல் மண் அள்ளுவதற்கு வருவாய் துறை அனுமதி அளித்தது.

இதன் காரணமாக எஸ்.வாழவந்தி ஏரியில் விவசாயிகளால் பல்வேறு இடங்களில் வண்டல் மண் அள்ளப்பட்டது. விவசாயிகள் ஒரே இடத்தில் அள்ளாமல் பல்வேறு பகுதிகளில் வண்டல் மண் அள்ளியதால், ஏரி தாறுமாறாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதோடு வருவாய் துறையால் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் வண்டல் மண் அள்ளிப்பட்டு உள்ளது என்பதற்கு ஏரியின் தற்போதைய சிதிலமடைந்த தோற்றமே சாட்சியாக உள்ளது.

ஏரியில் தண்ணீர் இல்லை

மேலும் மழைநீர் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளும், சில ஆக்கிரமிப்புகளுமே எஸ்.வாழவந்தி ஏரிக்கு தண்ணீர் வராததற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேபோல் ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் இருப்பது, ஏரியில் தண்ணீர் தேங்காததற்கு மற்றொரு காரணமாக உள்ளது.

இதனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக எஸ்.வாழவந்தி ஏரியில் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஏரிகள் நிரம்பின. ஆனால் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்புகளால் எஸ்.வாழவந்தி ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.

விவசாயிகள் வேதனை

இதுதங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தெரிவிக்கின்றனர். எனவே எஸ்.வாழவந்தி ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றி ஏரியை தூர்வாரி சமப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ஏரிக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது. அப்போது தான் ஏரியில் மழைநீர் தேங்கும். சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்வதோடு, விவசாயம் மேம்படும்.

இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சின்னகரசப்பாளையம் கே.எம்.சிவசாமி:- எஸ்.வாழவந்தி ஏரியானது இந்த பகுதியில் உள்ள பெரிய ஏரியாகும். தற்போது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்றதை காணமுடிகிறது. ஆனால் எஸ்.வாழவந்தி ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. மழைக்காலங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மழைநீர் கூட ஏரிக்கு வருவதற்கு சரியான பாதை இல்லை. அதனால் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்புகளை அகற்றி ஏரிக்கு தண்ணீரை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீரமைக்க வேண்டும்

கே.ராசாம்பாளையத்தை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் குப்புசாமி:-

எஸ்.வாழவந்தி ஏரியை நம்பி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. எனவே ஏரியில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி குண்டும், குழியுமாக உள்ள ஏரியை சீரமைக்க வேண்டும். அதோடு ஏரிக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து ஏரியில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஏரி வழிந்து வாய்க்காலில் தண்ணீர் போனால் விவசாயிகள் நெல், பருத்தி போன்ற பயிர்களை, பயிர் செய்து மூன்று போகம் வெள்ளாமை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்