< Back
மாநில செய்திகள்
தென்பெண்ணை ஆற்று உபரிநீர்  தூள்செட்டி ஏரிக்கு வருமா?  பாசன பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தென்பெண்ணை ஆற்று உபரிநீர் தூள்செட்டி ஏரிக்கு வருமா? பாசன பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
30 Sept 2022 12:15 AM IST

தென்பெண்ணை ஆற்று உபரிநீர் தூள்செட்டி ஏரிக்கு வருமா? பாசன பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

பாலக்கோடு:

தென்பெண்ணை ஆற்று உபரிநீர் தூள்செட்டி ஏரிக்கு வருமா என பாசன பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தூள்செட்டி ஏரி

விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் பருவமழையை நம்பியே விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டன. இவற்றில் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்த தூள்செட்டி ஏரியும் ஒன்றாகும்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அலியாளம் அணையில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு இணைப்பு கால்வாய் அமைத்து, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரிநீரில் ஒரு பகுதியை தூள்செட்டி ஏரிக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இந்த பகுதி மக்கள் சார்பில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

விரைவுபடுத்த கோரிக்கை

இந்த நிலையில் அலியாளம் அணையின் வலதுப்புற கால்வாயில் நீட்டிப்பு செய்து தூள்செட்டி ஏரிக்கு உபரிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த பணிகள் தொடங்கின.

இதன் தொடர்ச்சியாக அலியாளம் அணையில் இருந்து வலதுபுற கால்வாயில் புதிய வழங்கு கால்வாய் அமைக்க கடந்த 2021-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.56 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடங்கின. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் கும்மனூர், சாமனூர், சூடானூர், சி.டி. பெட்டம், கொரவாண்டஅள்ளி, குட்லானஅள்ளி, அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, ஜிட்டாண்ட அள்ளி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை காக்க திட்டப்பணியை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தொடரும் வறட்சி

இதுதொடர்பாக பொப்பிடியை சேர்ந்த தர்மசாஸ்தா கூறியதாவது:-

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் ஓடும் உபரி நீரில் பெரும்பகுதி கடலில் கலக்கிறது. இந்த உபரிநீரில் ஒரு பகுதியை அலியாளம் அணையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 ஏரிகள் மற்றும் தர்மபுரி மாவட்டம் தூள்செட்டி ஏரிக்கு கொண்டு வரும் திட்டப்பணிகளுக்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அலியாளம் பகுதியில் மந்தகதியில் உள்ள திட்டப்பணியை விரைவு படுத்த வேண்டும். வறட்சி காரணமாக பல ஆண்டுகளாக தூள்செட்டி ஏரி வறண்டு காணப்படுகிறது. அண்மையில் மழை பெய்த போதும் தூள் செட்டி ஏரியில் குறிப்பிடத்தக்க அளவில் மழைநீர் தேங்கவில்லை. இதனால் இந்த பகுதியில் வறட்சி தொடர்கிறது. எனவே தூள்செட்டி ஏரிக்கு தென் பெண்ணையாற்றின் உபரிநீர் விரைவாக வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தீத்தாரஅள்ளியை சேர்ந்த செல்வம்:-

தூள்செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை கொண்டு வரும் திட்டம் மூலம் தூள்செட்டி ஏரி நிரம்பினால் கூடுதலாக 20 பெரிய ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறுவதோடு பிற பகுதிகளுக்கும் பாசன வசதி கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாய பணிகள் மீண்டும் விறுவிறுப்படைந்தால் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்ற இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீண்டும் திரும்பி வந்து விவசாய பணியில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் இந்த பகுதியின் பொருளாதார நிலையும் மேம்படும். இதை கருத்தில் கொண்டு இந்த திட்டப் பணியை விரைவு படுத்த வேண்டும் என்று கூறினார்.

தெளிவாக தெரிவிக்க வேண்டும்

பெரியானூரைச் சேர்ந்த அம்பிகா கூறியதாவது:- பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டவர்கள். பருவமழை பொய்த்ததால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதிகள் கடும் வறட்சி ஏற்பட்டது. போதிய நீர் இல்லாததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை தூள் செட்டி ஏரிக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டப்பணி எந்த நிலையில் உள்ளது. எப்போது பணிகள் முடிந்து இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து இந்த திட்டத்தின் மூலம் பாசன வசதி பெரும் வாய்ப்புள்ள விவசாயிகளுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த திட்டத்தை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்