திருப்பூர்
பஸ்சில் குடிபோதையில் ஏறிய பெண்ணால் பரபரப்பு
|திருப்பூரில் அரசு டவுன் பஸ்சில் குடிபோதையில் ஏறிய பெண் இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் அரசு டவுன் பஸ்சில் குடிபோதையில் ஏறிய பெண் இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிபோதையில் பெண்
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று மாலை 4 மணிக்கு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியபாளையத்துக்கு புறப்பட்டது. பஸ்சில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் ஏறினார். அவர் பெண்கள் இருக்கும் இருக்கை பக்கம் சென்று அமர்ந்தார். பஸ்சில் சக பயணிகளுக்கு அவர் தொந்தரவு கொடுத்தார். இதைப்பார்த்த பெண்கள் அவர் இருந்த இருக்கை அருகே செல்லாமல் விலகினார்கள். ஒரு சீட்டில் தனியாக அமர்ந்து அந்த பெண் பயணித்தார்.
அப்போது கண்டக்டர் வந்து இலவச பயண சீட்டை கொடுப்பதற்காக 'எங்கு செல்ல வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அந்த பெண், 'நான் ஈரோடு செல்ல வேண்டும்' என்றார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்டக்டர், இந்த பஸ் சர்க்கார் பெரியபாளையம் வரை மட்டுமே செல்லும் என்றார். உடனே அங்கு இறக்கி விடுமாறு அந்த பெண் கூற கண்டக்டரும் டிக்கெட்டை கொடுத்தார்.
வாக்குவாதம்
சர்க்கார் பெரியபாளையத்துக்கு அந்த பஸ் வந்ததும் அந்த பெண் பஸ்சை விட்டு இறங்காமல் கண்டக்டர், டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டார். போதையில் உளறியபடி இருந்தார். பெரும் போராட்டம் நடத்திய பிறகும் அந்த பெண் இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் நோக்கி வந்தது. அதன் பின்பும் அந்த பெண் இறங்காமல் இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் என்ன செய்வது என்று புரியாமல் தவித்த டிரைவர், கண்டக்டர் உடனடியாக மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து பஸ்சை ஓட்டி வந்தனர்.
கூலிபாளையம் நால்ரோடு அருகே பஸ் வந்ததும், ரோந்து போலீசார் 4 பேர் அங்கு வந்தனர். பின்னர் அந்த போதை பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு, ஈரோடு செல்ல ஏற்பாடு செய்தனர். அதற்கு பிறகே நிம்மதி பெருமூச்சுவிட்டபடி அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து புறப்பட்டனர். போதைப்பெண் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.