திருப்பூர்
சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்
|உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தளி
உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வி.ஜி.ராவ் நகர் விரிவாக்கம் உள்ளது. இந்தப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அடிப்படை தேவையான சாலை வசதி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் "அடிப்படைத் தேவையில் ஒன்றான சாலை வசதி இந்த பகுதியில் பூர்த்தி அடையாமல் உள்ளது. பொதுமக்கள் சென்று வருவதற்கு எதுவாக தார் சாலை அமைக்கவில்லை. மண்பாதையும் குண்டும்.குழியுமாக உள்ளது.இந்த பகுதி களிமண் பாங்கானது என்பதால் மழை பெய்யும் போது சாலை சேறும் சகதிமாக மாறி விடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருவதுடன் பொதுமக்களும் அதில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே வி.ஜி.ராவ் விரிவாக்கம் பகுதியில் தரமான சாலை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.