< Back
மாநில செய்திகள்
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை;ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
ஈரோடு
மாநில செய்திகள்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை;ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
10 April 2023 11:54 PM GMT

பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் பலாத்காரம்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். இவருடைய மகன் தங்கராஜ் (வயது 34). கூலி தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியுடன் பழகி, செல்போனில் பேசி வந்தார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் தங்கராஜை கண்டித்தனர். இதைத்தொடர்ந்து தங்கராஜ் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, தனது மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டிக்கு கடத்தி சென்றார்.

பின்னர், அன்று இரவு அங்குள்ள ஒரு வீட்டில் மாணவியை கட்டாயப்படுத்தி தங்கராஜ் பாலியல் பலாத்காரம் செய்தார். அதைத்தொடர்ந்து மறுநாள் மாணவியை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து, மீண்டும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி தங்கராஜ் மீது போக்சோ, குழந்தை திருமண தடை சட்டம், கடத்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.

20 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தங்கராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மைனர் பெண்ணை கடத்தி சென்ற குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தை திருமணம் செய்ததற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.

மேலும் அபராதமாக ரூ.7 ஆயிரமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

Related Tags :
மேலும் செய்திகள்