திருவள்ளூர்
கனகம்மாசத்திரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
|கனகம்மாசத்திரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்த மதுரா காந்தி கிராமம் செல்லும் பாதை அருகே ஆண் பிணம் கிடப்பதாக ராமஞ்சேரி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் இறந்த நபர் ஆந்திர மாநிலம் புத்தூர் அடுத்த கம்மாபள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 27) என்பதும் இவர் மரம் வெட்டும் கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி பொம்மி மற்றும் தனது கிராமத்தை சேர்ந்த நண்பர்களுடன் கனகம்மாசத்திரம் அடுத்த காந்தி கிராமம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சவுக்கு மரங்களை வெட்டுவதற்கு வந்துள்ளார். அந்த பகுதியில் தங்கி இருந்து சவுக்கு மரங்களை வெட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனகம்மாசத்திரம் பஜார் வீதிக்கு சென்று விட்டு தான் தங்கி இருக்கும் மதுரா காந்திநகர் நோக்கி வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து கணேசனின் மனைவி பொம்மி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை தேடி வருகின்றனர்.