திருவள்ளூர்
திருவள்ளூரில் வாகனம் மோதி தொழிலாளி பலி
|திருவள்ளூரில் வாகனம் மோதி சாலையோரம் நின்ற தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
திருவள்ளூர் பெரியகுப்பம் கற்குழாய் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 43). இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தார். தற்போது கம்பெனி விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் இரவு பெரியகுப்பம் மேம்பாலத்தின் கீழே சாலையில் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்பொழுது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பாஸ்கரன் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. வாகனம் மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
பலி
இதையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பாஸ்கரன் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர். உயிரிழந்த பாஸ்கரனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.