திண்டுக்கல்
பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி
|சாணார்பட்டி அருகே பஸ் மோதி கூலித்தொழிலாளி பலியானார்.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை தென்மலை பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (வயது 38). கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவர், தனது மனைவி செல்வி மற்றும் மகள், மகனுடன் நத்தம் அருகே முளையூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு தனது மொபட்டில் தென்மலை நோக்கி திரும்பி கொண்டிருந்தார். ஆண்டிச்சாமி மொபட்டை ஓட்டினார். 3 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.
திண்டுக்கல்-நத்தம் சாலையில், கோபால்பட்டி அருகே ஒத்தக்கடை என்னுமிடத்தில் மொபட் வந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி திடீரென 4 பேரும், சாலையில் விழுந்தனர். அந்த சமயத்தில் நத்தம் நோக்கி சென்ற சுற்றுலா பஸ், ஆண்டிச்சாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மனைவி மற்றும் குழந்தைகள் கண் எதிரே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஆண்டிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் செல்வி மற்றும் 2 குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.