திருவள்ளூர்
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி
|பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்.
பேரம்பாக்கம் அடுத்த புதுப்பட்டு ஊராட்சி, வாசனம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 67). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி திருவள்ளூரில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவள்ளூரில் உள்ள தன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவர் மப்பேடு- சுங்குவாச்சத்திரம் நெடுஞ்சாலையான கண்ணூர் எடை மேடை அருகே வரும்போது எதிரே ஸ்ரீபெரும்புதூரிலிருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோவிந்தராஜன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதைக் கண்ட லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் கோவிந்தராைஜ உடனடியாக மீட்டு சந்தவேலூர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் கோவிந்தராஜன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்ப்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.