காஞ்சிபுரம்
உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி - டிரைவர் கைது
|உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம் மேனலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). தச்சு வேலை செய்து வந்தார். நேற்று காலை 10 மணி அளவில் மேனலூரில் இருந்து உத்திரமேரூரில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் மர சட்டங்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார். உத்திரமேரூர் நங்கையர்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்லப்பன் தலையில் லாரியில் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செல்லப்பன் பலியானார். இது பற்றி செல்லப்பன் மகன் முருகன் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பலியான செல்லப்பன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் பாண்டியன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.