நாமக்கல்
மொபட் மீது டிராக்டர் மோதி கூலித்தொழிலாளி சாவு
|வேலகவுண்டம்பட்டி அருகே மொபட் மீது டிராக்டர் மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அல்லாளபுரம், பொம்மம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 65) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி (60). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பொருட்களை வாங்குவதற்காக மொபட்டில் பொம்மம்பட்டிக்கு சென்றுள்ளனர். பின்னர் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பொம்மம்பட்டி நோக்கி மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர். அல்லாளபுரம் அருகே சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த போது அல்லாளபுரத்திலிருந்து பொம்மம்பட்டி நோக்கி எதிரே வேகமாக வந்த டிராக்டர் ஒன்று ஜெயராஜ், சுமதி தம்பதியர் சென்ற மொபட் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது மனைவி சுமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட் மீது விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிலுவம்பட்டியைச் சேர்ந்த தமிழரசனை (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.