தம்பியின் காதலியிடம் பேசிய தொழிலாளி அடித்துக்கொலை - திருச்சியில் பரபரப்பு
|தொழிலாளியை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஜெகதீசன் (வயது 27). இவரது தம்பி சதீஷ். இவர் கண்தீனதயாள் நகரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான நாகராஜ் (43) என்பவர் உங்களுடைய தாய் எங்கே என்று கேட்டுள்ளார்.
இதனை அறிந்த ஜெகதீசன், நாகராஜிடம் எனது தம்பியின் காதலியிடம் எப்படி பேசலாம் என்று கூறி தகராறு செய்து தன்னுடன் வந்த நண்பர்களுடன் சேர்ந்து நாகராஜை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகராஜின் சகோதரி புவனேஸ்வரி மணிகண்டம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கொலை வழக்குப்பதிவு செய்து ஜெகதீசன், அவரது நண்பர்களான கண்தீனதயாள் நகரை சேர்ந்த சிலம்பரசன் (19), தீபக் (19), ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தார். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.