கன்னியாகுமரி
பிளஸ்-1 மாணவியை கடத்திய தொழிலாளி கைது
|திங்கள்சந்தை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை,
திங்கள்சந்தை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பிளஸ்-1 மாணவி
திங்கள்சந்தை அருகே உள்ள திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது28), தொழிலாளி. இவர் குளச்சல் துறைமுகத்தில் ஐஸ் கட்டி உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கும் 15 வயது மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இதற்காக விடுதியில் தங்கியுள்ளார்.
மாணவி விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் ேபாது அவரை பிரகாஷ் சந்தித்து பேசி வந்தார்.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி அந்த மாணவியை காணவில்லை என்று தாயார் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் மாணவியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்.
மாணவி கடத்தல்
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி வீடு வந்து சேரவில்லை. இதுகுறித்து தாயார் மாணவியின் தோழிகளிடம் விசாரித்தார். அப்போது மாணவி பஸ்சில் இருந்து அழகியமண்டபத்தில் இறங்கியதாக தோழிகள் தெரிவித்தனர்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மாணவியை பிரகாஷ் கடத்தி சென்றுள்ளதாக கூறியிருந்தார்.
தொழிலாளி கைது
அந்தபுகாரின் அடிப்படையில் தொழிலாளி பிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திக்கணங்கோடு பகுதியில் வைத்து பிரகாஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மாணவியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.