மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது
|கூடலூர் அருகே மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி பேபி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (47 வயது). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குஞ்சு(45 வயது). இந்த நிலையில் ரவிச்சந்திரன் கர்நாடக மாநிலத்துக்கு கூலி வேலைக்கு சென்றிருந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் அவரது மனைவி குஞ்சு இல்லை. இதனால் அவரது வருகைக்காக ரவிச்சந்திரன் காத்திருந்தார். நீண்டநேரம் ஆகியும் வராததால் அவர் ஆத்திரம் அடைந்தார்.
பின்னர் இரவில் குஞ்சு வீட்டுக்கு வந்தார். உடனே அவரிடம், இவ்வளவு நேரம் எங்கு சென்றாய்? என்று ரவிச்சந்திரன் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றிய நிலையில் கைகலப்பானது. இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து குஞ்சுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் யாரிடமும் தெரிவிக்கவில்லை. நேற்று காலையில் குஞ்சு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது குஞ்சு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார், மசினகுடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், இப்ராஹிம் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர், குடும்ப தகராறு காரணமாக குடிபோதையில் குஞ்சுவை அடித்து கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் குஞ்சுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். மேலும் ரவிச்சந்திரனை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.