ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி பெண் கமிஷனர் கைது
|கைது செய்யப்பட்ட நகராட்சி பெண் கமிஷனரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னையை அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் முனுசாமி. ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரான இவருக்கு சொந்தமான 3 நிலங்கள் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. அந்த காலி நிலங்களில் வீடு கட்டுவதற்காக நிலம் வரன்முறை பெறுவதற்காக குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார்.
நிலம் வரன்முறை செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அதற்கான சான்றிதழை வழங்க ஒரு வீட்டுமனை வரன்முறைக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.36 ஆயிரம் லஞ்சமாக தரும்படி குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கேட்டனர். அதற்கு முனுசாமி, ஒரு நிலம் வரன்முறைக்கு ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் தருவதாக பேசி முடித்துள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முனுசாமி, இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நகராட்சி கமிஷனர், நகரமைப்பு ஆய்வாளர் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை முனுசாமியிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
அந்த பணத்துடன் முனுசாமி, நேற்று குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் 3 வீட்டுமனை வரன்முறைகளுக்கு ரூ.36 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே நிலம் வரன்முறைப்படுத்தப்பட்ட சான்றிதழ் கொடுக்கப்படும் என அதிகாரிகள் கறாராக கூறினர். இதையடுத்து ரூ.24 ஆயிரம் பெற்றுக்கொண்டு 2 வீட்டுமனைகளுக்கான வரன்முறை சான்றிதழ் கொடுக்குமாறு முனுசாமி கூறினார்.
பின்னர் ரசாயன பொடி தடவிய லஞ்ச பணத்தை அலுவலக உதவியாளர் சாம்சனிடம் முனுசாமி கொடுத்தார். அவர் லஞ்ச பணத்தை கையில் வாங்கியதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அலுவலக உதவியாளர் சாம்சனை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.
நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கூறியதன் பேரிலேயே தான் லஞ்ச பணத்தை வாங்கியதாக சாம்சன் கூறினார். இதையடுத்து நகராட்சி கமிஷனர், நகரமைப்பு ஆய்வாளர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தனி அறையில் வைத்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான 3 பேரின் வீடுகளுக்கு சென்று சோதனை செய்யவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி, திருவேற்காடு நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நேற்று மதியம் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில்தான் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.