திருவள்ளூர்
குடியிருப்பு பகுதிக்கான பூங்கா இடத்தை மீட்க வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
|குடியிருப்பு பகுதிக்கான பூங்கா இடத்தை மீட்க வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் 5 ஏக்கர் பரப்பளவில் ஜெய்ஹிந்த் நகர் என்ற வீட்டுமனை குடியிருப்பு உள்ளது. இங்கு பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி மதிப்புடைய நிலத்தை சிலர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றி பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இரும்பு வேலி அமைத்து பேரூராட்சி நிர்வாகம் அதனை மீட்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் கடந்த சில மாதங்களாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் புகார் மனு அளித்து இருந்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை.
இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் குடியிருப்புவாசிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
இதற்கு நகர கிளை செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துளசிநாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், நிர்வாகிகள் சூர்யபிரகாஷ், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் குடியிருப்புவாசிகளின் கோரிக்கை தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் யமுனாவிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.