திருவள்ளூர்
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
|கும்மிடிப்பூண்டி அருகே அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் 3 மணி நேரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஏரி உள்வாய், வண்டிப்பாதை, மேய்க்கால் புறம்போக்கு போன்ற இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அவற்றில் தேசிய ஊரக வேலை திட்ட பணி வழங்கிட வேண்டும் என அந்த ஊராட்சியை சேர்ந்த சிலர் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்களுடன் இணைந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஊராட்சியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பதிவேடுகளின் அடிப்படையில் சரிபார்த்து அளவிட்டு அவற்றை அகற்ற வேண்டியது தாசில்தார் அலுவலகத்தினர்தான் என்று கூறினார். மேலும் தற்போது இந்த கோரிக்கை வலியுறுத்தப்படுவதால் கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் தகவல் தெரிவித்த நிலையில் அவரது ஆலோசனைபடி அடுத்த மாதம் 11-ந்தேதி தாசில்தார் அலுவலக நிர்வாக கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தினர் போலீசாருடன் இணைந்து ஆக்கிரமிப்பு பணிகளை கண்காணிக்கும் என வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் தெரிவித்தார்.
இதனையடுத்து தங்களது 3 மணி நேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.