ராமநாதபுரம்
பிழை பொறுக்கும் சாத்தய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
|அ.புத்தூர் கிராமத்தில் பிழை பொறுக்கும் சாத்தய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பரமக்குடி,
அ.புத்தூர் கிராமத்தில் பிழை பொறுக்கும் சாத்தய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் கும்பாபிஷேகம்
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் அ.புத்தூர் கிராமத்தில் பிழை பொறுக்கும் சாத்தய்யனார் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ராஜ கோபுரம் புதிதாக கட்டப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டது.
திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கடந்த 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று அதிகாலை அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்பு 7.30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி கோ பூஜை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது.
சாத்தய்யனார்
அதைத் தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் புனித கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை வலம் வந்தனர். அதன்பின்னர் ராஜ கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தரிசித்தனர். பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ பூஜைகளும் நடந்தது. இதில் சுற்றுப்புற கிராம மக்களும், குல தெய்வ குடிமக்களும் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அ.புத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.