< Back
மாநில செய்திகள்
கும்பகோணம் என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.13½ லட்சம் மோசடி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கும்பகோணம் என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.13½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
19 May 2022 8:02 PM GMT

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கும்பகோணம் என்ஜினீயரிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்:

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கும்பகோணம் என்ஜினீயரிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்ஜினீயர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருநறையூர் உமர் நகரை சேர்ந்தவர் முகமது நபில்(வயது 26). இவர், என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஐக்கிய அரபு நாட்டில் வேலை உள்ளது என்று ஒரு விளம்பரம் பதிவிடப்பட்டிருந்தது. அந்தப் பக்கத்தை கிளிக் செய்து முகமது நபில் பார்த்தார்.

அதில் தொடர்புடைய பக்கத்தில் முகமது நபில் தனது தகவல்களைப் பரிமாறிக் கொண்டார். இந்த தகவல் பரிமாற்றம் முழுக்க, முழுக்க ஆன்லைனிலேயே நடந்தது. அப்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வேலை வேண்டும் என்றால் இன்டர்வியூ கட்டணம், விசா கட்டணம், விமான கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த வேண்டும் என அந்த வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ.13½ லட்சம் மோசடி

இதற்காக 30 வங்கிக் கணக்குகளும் கொடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முகமது நபில் அந்த வங்கி கணக்குகளில் கடந்த மாதம் 15-ந் தேதி வரை பல தவணைகளாக ரூ.13 லட்சத்து 68 ஆயிரத்து 600 செலுத்தியிருந்தார். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட இணையதள பக்கத்தில் இருந்து வேலை தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது நபில் ஆன்லைனில் குறுந்தகவல் அனுப்பினார். அதற்கு எந்த ஒரு பதிலும் திரும்பி வரவில்லை. பலமுறை முயன்றும் பதில் கிடைக்காததால் தான் மோசடி செய்யப்பட்டு விட்டோம் என்பதை அவர் உணர்ந்தார்.

இது குறித்து முகமது நபில் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

தனியார் வங்கி ஊழியர்

தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவிலை அடுத்த கீரனூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன்(வயது 26). இவர், தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், சமூக வலைதளம் மூலம் தனது நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருநதுள்ளார். அந்த உரையாடல் பதிவை மர்ம நபர் ஒருவர் 'ஹேக்' செய்தார்.

இதன் மூலம் அந்த மர்ம நபர் இருவரின் உரையாடலையும் ஒட்டுக் கேட்டு முழு விவரங்களையும் சேகரித்து கொண்டார். இதைப் பயன்படுத்தி அந்த மர்ம நபர் மோசடியில் ஈடுபட முடிவு செய்தார். அதன்படி மாதவனின் நண்பர் புகைப்படத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டு அவரது படம் வருமாறு மாதவனுக்கு போன் செய்தார். மாதவனும் தனது நண்பர் பேசுகிறார் என நினைத்தார்.

ரூ.1½ லட்சம் மோசடி

அப்போது தனக்கு பணம் கொடுத்து உதவுமாறு கேட்டு வங்கி எண்ணையும் குறிப்பிட்டார். இதை உண்மை என்று நம்பிய மாதவனும் ரூ.13 ஆயிரம் செலுத்தினார். மேலும் தனது கிரெடிட் கார்டு ஓ.டி.பி. நம்பரையும் தெரிவித்தார். இதனை பயன்படுத்தி அந்த நபர் மாதவனின் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 602-ஐ எடுத்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாதவன் உடனடியாக அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் பலனில்லை. அப்போது தான் நண்பர் போல் பேசி அந்த மர்ம நபர் தன்னிடம் பணம் மோசடி செய்ததை மாதவன் உணர்ந்தார்.

இது குறித்து மாதவன் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இந்த இரண்டு தனித்தனி புகார்கள் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்