அரியலூர்
முத்துகண்ணு மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
|மீன்சுருட்டி அருகே முத்துகண்ணு மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் முத்துகண்ணு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 22-ந்தேதி மங்கள இசை, அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், கோபூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் 2-ம்கால, 3-ம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து, நேற்று காலை 4-ம்கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி மற்றும் யாத்ரா தானம் நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணியளவில் மகாபூர்ணாகுதி, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. காலை 11 மணியளவில் முத்துகண்ணு மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பரிவார தெய்வங்களான கணபதி, பாலமுருகன், வீரனார் ஆகிய தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.