< Back
மாநில செய்திகள்
கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்
மாநில செய்திகள்

கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
23 Nov 2023 5:05 AM IST

பக்தர்கள் குவிந்து வருவதால், அனைவரும் விழாவை காண போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை,

மதுரை அருகே அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. அங்கு கடந்த 2011 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக இந்த கோவிலில் ரூ.2 கோடியில் ராஜகோபுர திருப்பணிகள் நிறைவு பெற்று உள்ளன.

இதையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 பட்டர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் நடத்தினர்.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால், அனைவரும் விழாவை காண போதிய தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. முன்னதாக யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ராஜகோபுர கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்படுகிறது.

தொடர்ந்து 15 இடங்களில் சுழல் கருவி மூலம் பக்த்ர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. அத்துடன் பல வண்ண பூக்களை ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களிலும், பக்தர்கள் மீதும் தூவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அன்னதானம் சாப்பிடவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவையொட்டி கள்ளழகர் கோவில், ராஜகோபுரம், 18-ம் படிகளுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு கோவில் வளாகம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக பணிகளை அறங்காவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்