< Back
மாநில செய்திகள்
சென்னையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம்
சென்னை
மாநில செய்திகள்

சென்னையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
13 March 2023 10:05 AM IST

சென்னையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புதிதாக கட்டி உள்ள பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

பத்மாவதி தாயார் கோவில்

திருப்பதி திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு தனி கோவில் இருப்பது போன்று, சென்னையில் பத்மாவதி தாயாருக்கு தனி கோவில் கட்டுவதற்காக பழம்பெரும் நடிகை காஞ்சனாவின் சகோதரியும், கர்நாடக மாநில முன்னாள் தலைமை செயலாளருமான கிரிஜா பாண்டே அவர் குடும்பத்துக்கு சொந்தமான, தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான 6 கிரவுண்டு நிலத்தை (14 ஆயிரத்து 880 சதுர அடி) திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானமாக அளித்தார். அந்த இடத்தில் திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ரூ.10 கோடியில் பத்மாவதி தாயாருக்கு மிகப் பிரமாண்டமாக தனி கோவில் கட்ட முடிவு செய்தது.

அதன்படி காஞ்சி சங்கர விஜேயேந்திர சரஸ்வதி சாமிகள் அருளாசியுடன், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவர் ஏ.ஜி.சேகர்ரெட்டி ஆகியோர் தலைமையில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி பூமி பூஜையுடன் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. தற்போது ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் முகாம் மண்டபத்துடன் கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

17-ந்தேதி கும்பாபிஷேகம்

புதிதாக கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியளவில் நடக்கிறது. இதில் காஞ்சி சங்கர விஜேயேந்திர சரஸ்வதி சாமிகள், விசாகப்பட்டினம், சாரதா பீடத்தைச் சேர்ந்த சுவரூபானந்தேந்திரா, சுவாத்மானந்தேந்திரா ஆகிய மடாதிபதிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.பி.தர்மாரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பு பூஜைகள்

கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கியது. 17-ந்தேதி வரை வாஸ்து பூஜை, மூர்த்தி ஓமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 16-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மூலவிக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

கும்பாபிஷேகத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. குங்கும் உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு ராமகிருஷ்ணா பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அழைப்பிதழ் நேற்று வெளியிடப்பட்டது.

மேற்கண்ட தகவலை ஏ.ஜெ.சேகர் ரெட்டி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. காயத்திரி தேவி மற்றும் உள்ளுர் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்