< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி அருகே ஒரே நாளில் 7 கோவில்களில் கும்பாபிஷேகம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி அருகே ஒரே நாளில் 7 கோவில்களில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
3 Sep 2023 6:45 PM GMT

விக்கிரவாண்டி அருகே ஒரே நாளில் 7 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி ஒன்றியம் மேலக்கொந்தையில் விநாயகர், முத்துமாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வினைதீர்த்த பெருமாள், முருகன், கங்கையம்மன், விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர், பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் ஆகிய கோவில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்றது.

இதையடுத்து அனைத்து கோவில்களுக்கும் ஒரே இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 31-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து தினசரி யாகசாலையில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று காலை 4-ம் காலயாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, விநாயகர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்துமாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வினைதீர்த்த பெருமாள், முருகன், கங்கையம்மன், விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர், பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் ஆகிய கோவில்களின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை திருவண்ணாமலை சீனிவாச சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.

இதில் மேலக்கொந்தை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்