< Back
மாநில செய்திகள்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 54½ அடி உயர புதிய கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 54½ அடி உயர புதிய கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தினத்தந்தி
|
14 March 2023 2:25 PM IST

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 54½ அடி உயர புதிய கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு கொடியேற்றத்தின் போது கொடிமரத்தை புனரமைப்பு செய்து மெருகூட்டுவதற்காக கொடி மரத்தின் மீது இருந்த பித்தளை கவசங்கள் கழற்றப்பட்டது. அப்போது கொடிமரம் சேதமடைந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 600 ஆண்டுகள் பழமையான கொடி மரம் அகற்றப்பட்டு புதிய கொடிமரம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூரை சேர்ந்த நீலகண்டன் என்பவர் கொடிமரத்தை வழங்க முன்வந்து கேரள மாநிலத்தில் இருந்து 1 டன் எடையிலான தேக்கு மரத்தை வழங்கினார்.

இதையடுத்து 8 மாதங்களாக கொடிமரத்தை தயார் செய்யும் பணியை சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்த மல்லிகார்ஜூனா சேவா டிரஸ்ட் வாயிலாக செய்யப்பட்டது. இதையடுத்து 54½ அடி உயரம் கொண்ட கொடிமரம் கடந்த மூன்று மாதத்திற்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கொடிமர கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முதல் யாக கால பூஜையும், நேற்று காலை 9 மணிக்கு இரண்டாம் யாககால பூஜை செய்யப்பட்டு காலை 10 மணிக்கு கொடிமரம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திருத்தணி முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் திருவாலங்காடு ஒன்றிய குழு தலைவர் ஜீவா, ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்