< Back
மாநில செய்திகள்
சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
25 March 2023 6:47 PM GMT

சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.

பிரசித்தி பெற்ற கோவில்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு நடந்தது. இதேபோல் இந்த கோவிலின் உபகோவிலான மலையில் அமைந்துள்ள பெரியசாமி மலைக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெரியசாமி மலைக்கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. அந்த சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்ய பாலாயம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் நடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, தற்போது மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நாளை கும்பாபிஷேகம்

இதைத்தொடர்ந்து சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு மேல் மலைக்கோவிலில் முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

நாளை அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை தொடங்குகிறது. காலை 6.30 மணிக்கு யாக சாலையில் இருந்து இறை சக்திகளை மூலவருக்கு எழுந்தருளுவித்தலும், பின்னர் 96 வகையான மூலிகை பொருட்கள், பழ வகைகளை வேள்வியில் இடுதலும் நடக்கிறது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடு நடக்கிறது.

பெண் பக்தர்களுக்கு அனுமதியில்லை

காலை 7.15 மணிக்கு மேல் செல்லியம்மன், பெரியசாமி, லாடசாமி, நாக கன்னியம்மன், செங்கமலை அய்யான், பொன்னுசாமி அய்யான், கொறபுள்ளியான் சுவாமி, ஆத்தடியார் சுவாமி, கிணத்தடியார் சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. மலைக்கோவிலுக்கு பெண் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்கு பிறகு...

இதேபோல் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெறவுள்ளது. கோவிலில் யாகசாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முடிவுற்று கும்பாபிஷேகத்துக்கு தயார் நிலையில் உள்ளது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக சாலை பூஜை வருகிற 2-ந்தேதியும், 2, 3-ம் கால யாக சாலை பூஜைகள் 3-ந்தேதியும், 4-ம் கால யாக சாலை பூஜை 4-ந்தேதியும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கோவில் ஊழியர்கள், பணியாளர்கள், பூசாரிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்