கன்னியாகுமரி
வாகனம் மோதி குமரி தொழிலாளி பலி
|கேரள மாநிலம் கொல்லத்தில் வாகனம் மோதி குமரி தொழிலாளி இறந்தார். அவரது முகவரி தெரியாததால் உடலை ஒப்படைக்க முடியாமல் கேரள போலீசார் தவித்து வருகிறார்கள்.
தக்கலை,
கேரள மாநிலம் கொல்லத்தில் வாகனம் மோதி குமரி தொழிலாளி இறந்தார். அவரது முகவரி தெரியாததால் உடலை ஒப்படைக்க முடியாமல் கேரள போலீசார் தவித்து வருகிறார்கள்.
வியாபாரி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் சஜீவ் (வயது43). இவர் தனது வீட்டின் அருகே டெலிபோன் போன்றவற்றை வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜன் (வயது60) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவர் சஜீவின் கடையில் இருந்து பொருட்களை எடுத்து சென்று சாலையோரம் வியாபாரம் செய்வது வழக்கம். கடந்த 15-ந் தேதி வியாபாரம் முடிந்த பின்பு தான் தங்கி இருந்த அறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
முகவரி தெரியவில்லை
இதுகுறித்து கல்லம்பலம் போலீசாருக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர் அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த ராஜன் என அடையாளம் தெரிந்தாலும் அவரது முழு முகவரி சரியாக தெரியவில்லை.
இதனால் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் கேரள போலீசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜன் வேலை பார்த்த கடையை நடத்தி வரும் சஜீவ் நேற்று இரவு தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் விபத்தில் பலியான ராஜனின் தந்தை ஜெபாஸ்டின், தாயார் கமலம், சகோதரிகள் நேசம், பொன்னேசம் என்றும், அவரது உறவினர்களை அடையாளம் கண்டுபிடித்து ெகாடுக்குமாறு கூறியுள்ளார்.
இந்த அடையாளங்களின் அடிப்படையில் ராஜனின் உறவினர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.