கன்னியாகுமரி
கடலில் 17 மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த குமரி மீனவர்
|கடலில் தவறி விழுந்த குமரி மீனவர் 17 மணி நேரம் கடலில் நீந்தி உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அவருடைய தன்னம்பிக்கையை கலெக்டர் ஸ்ரீதர் பாராட்டினார்.
நாகர்கோவில் அருகில் உள்ள பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சூசைமரியான் (வயது 62). இவர் உள்பட 19 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வேப்பூர் பகுதியில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் சூசைமரியான், 17 மணி நேரம் கடலிலேயே நீந்தியபடி உயிர் பிழைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மீனவர் சூசைமரியான் கண்ணீர்மல்க கூறியதாவது:-
கேரள மாநிலம் வேப்பூரில் இருந்து கடந்த 10-ந் தேதி இரவு 11 மணிக்கு தொழிலுக்காக விசைப்படகில் நான் உள்பட 19 பேர் சேர்ந்து புறப்பட்டோம். படகை ஓட்டுனர் டேவிட் செலுத்திக் கொண்டிருந்தார். படகில் இருந்த நாங்கள் அதிகாலை 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு என்னுடன் இருந்தவர்கள் தூங்கச் சென்று விட்டார்கள். எனக்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு. எனவே படகில் எனது பொருட்கள் இருந்த இடத்துக்கு, அதாவது படகின் பின்புறம் சென்றேன். அப்போது படகில் குறுக்காக கிடைந்த பிளாஸ்டிக் பைப் ஒன்று எனது காலில் தட்டியது. இதனால் நான் படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்தேன். அப்போது அதிகாலை 3.45 மணி இருக்கும். படகு ஓட்டும் போது கடுமையான சத்தம் வரும். இதனால் நான் விழுந்த போது எழுப்பிய அபயக்குரல் படகு ஓட்டியவருக்கும், படகில் படுத்திருந்தவர்களுக்கும் கேட்கவில்லை.
இந்தநிலையில் அதிகாலை 5 மணிக்கு படகில் உணவு சமைப்பவர்கள் எங்களுக்கு வழக்கமாக டீ கொடுப்பார்கள். அதேபோல் டீ கொடுக்க வந்தபோது நான் காணாமல் போய் இருப்பதை அறிந்து பதற்றமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து எங்கள் படகுடன் வந்த மற்றொரு விசைப்படகில் வந்தவர்களும், 2 வள்ளங்களில் வந்தவர்களுமாக சுமார் 45-க்கும் மேற்பட்டவர்கள் என்னை கடல் பகுதியில் சுற்றி தேட ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் தேடிய இடத்தில் இருந்து சிறிது தொலைவில் நான் கடலில் நீந்தி கொண்டிருந்தேன். ஆனால் நான் எழுப்பும் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. இதனால் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தொடர்ந்து கடல் தண்ணீரில் நீந்தியபடியே கிடந்தேன்.
எனக்கு வயது 62 ஆனாலும், உடல் வலு இருந்ததின் காரணமாக தொடர்ந்து நீந்திக் கொண்டிருந்தேன். இவ்வாறு மாலை வரை கடலில் நீந்திக் கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் நீந்த முடியவில்லை. சோர்வடைந்த நான் மெல்ல, மெல்ல கடலுக்குள் மூழ்கும் நிலைக்கு சென்றேன்.
அந்த நேரத்தில் கடவுளிடமும், எனது முன்னோர்களிடமும் வேண்டினேன். ஏதோ அதிசயம் நிகழ்ந்ததைப் போல எனது காலை யாரோ ஒருவர் கடலுக்கு அடியில் இருந்து மேலே உயர்த்துவதை உணர்ந்தேன். கடவுள் தான் என்னை தள்ளியிருக்கலாம் என நினைத்து, கொஞ்சம் தெம்பு வந்தவனாக மீண்டும் கடலில் நீந்தத் தொடங்கினேன். மாலை நேரமாக இருந்ததால் நான் நீந்திக்கொண்டிருந்த பகுதியில் இருந்து சிறிது தொலைவில் வள்ளம் ஒன்றில் விளக்கு ஏற்றப்பட்டு இருப்பதைப் பார்த்தேன். அது நான் உயிர் பிழைப்பதற்கான ஒளியாகவே எனக்கு தென்பட்டது.
அதை பார்த்ததும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. அந்த வள்ளம் உள்ள பகுதிக்கு நீந்திச் சென்று உயிர் பிழைத்து விடலாம் என்று நினைத்தேன். எனவே அந்த வள்ளத்தை நோக்கி நீந்த தொடங்கினேன். சிறிது தொலைவில் இருப்பது போன்ற வள்ளத்தை நான் சென்றடைய 3 மணி நேரம் ஆனது. வள்ளம் அருகில் சென்றதும் அபயக்குரல் எழுப்பினேன். எனது சத்தத்தைக் கேட்டு அந்த வள்ளத்தில் இருந்த மீனவர்கள் வைத்திருந்த டார்ச்லைட் ஒளி மூலம் நான் தண்ணீரில் கிடப்பதை பார்த்து, கயிறு கட்டி இறங்கி என்னை மீட்டு வள்ளத்தில் ஏற்றினார்கள். அவர்கள் என்னை மீட்கும்போது இரவு 8.30 மணி இருக்கும். கிட்டத்தட்ட 17 மணி நேரம் உயிர் காக்கும் உபகரணங்கள் எதுவும் இல்லாமல் தண்ணீரிலேயே நீந்திக்கொண்டிருந்த என்னை, வள்ளத்தில் என்னை ஏற்றிய பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது.
பின்னர் வள்ளத்தில் இருந்த மீனவர்கள் குளிர்ந்த நீரில் 17 மணி நேரமாக மிதந்து, உறைந்து போய் சோர்வடைந்திருந்த எனக்கு முதலுதவி அளித்து சாப்பிட உணவு, பழங்கள் கொடுத்தனர். அவர்களுக்கு கண்ணீருடன் நான் நன்றி தெரிவித்தேன். இதனை தொடர்ந்து என்னுடன் வந்த சக மீனவர்களை வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு கரைக்கு வந்து நள்ளிரவு 1.30 மணிக்கு வேப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நான் உயிர் பிழைத்து ஊருக்கு வந்ததும் எனது மனைவி சலேத்மேரி, மகள் மற்றும் பேர பிள்ளைகள் எல்லோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை அறிந்த கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், சூசைமரியானை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டி பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
மேலும் கடலில் நீந்தி போராடி உயிர் பிழைத்த மீனவர் சூசைமரியான் மற்றும் அவருடைய குடும்பத்தை காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.