< Back
மாநில செய்திகள்
தொடர் பலத்த மழையினால் ரத்தினபுரி குளம் நிரம்பியது
திருப்பூர்
மாநில செய்திகள்

தொடர் பலத்த மழையினால் ரத்தினபுரி குளம் நிரம்பியது

தினத்தந்தி
|
8 Dec 2022 6:24 PM GMT

நத்தக்காடையூர் அருகே தொடர் பலத்த மழையினால் ரத்தினபுரி குளம் நிரம்பி வழிகிறது.

நத்தக்காடையூர் அருகே தொடர் பலத்த மழையினால் ரத்தினபுரி குளம் நிரம்பி வழிகிறது.

ரத்தினபுரி குளம்

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினபுரியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் மழை காலங்கள் மற்றும் கீழ்பவானி பாசன கால்வாய்களில் தண்ணீர் செல்லும் நேரங்களில் உபரி நீரால் அதிக நீர்வரத்து ஏற்பட்டு தண்ணீர் நிரம்பி பச்சை, பசேல் என்று கடல் போல் காட்சியளிக்கும்.

இந்த குளம் அதிக அளவில் நீர் நிரம்பி இருக்கும் போதும், உபரி நீர் அதிக அளவில் வெளியேறும் போதும் ரத்தினபுரி, நஞ்சப்பகவுண்டன்வலசு, உலகுடையார்பாளையம், ஆலாங்காட்டுபதி, குச்சிக்காட்டுபதி, நாச்சிமுத்து நகர், ஓடக்காடு, காங்கயம் சாலை, கடைவீதி பகுதி, ஈரோடு சாலை, சந்தைப்பேட்டை, ஈஸ்வரன் கோவில் வீதி, வ.உ.சி நகர் ஆகிய சுற்றுவட்டார நகர, கிராம பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் அதிக அளவில் உயர்ந்து இருக்கும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் நன்கு பாதுகாக்கப்படும்.

நிரம்பியது

இந்த நிலையில் இப்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உருவானதன் காரணமாக கடந்த 3 மாத காலமாக அவ்வப்போது மாலை, இரவு நேரங்களில் மிதமான, சாரல், பலத்த மழை பெய்தது.

இதனை தொடர்ந்து இந்த மழையின் காரணமாகவும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ள நீரினால் வெளியேறும் உபரி நீரும் இந்த குளத்திற்கு அதிக அளவில் வந்து சேர்ந்து உள்ளது. இதனால் இந்த குளத்திற்கு நீர் வரத்து அதிகம் ஏற்பட்டதன் காரணமாக இந்த குளம் தற்போது தண்ணீர் நிரம்பி கடல் போல் தேங்கி காட்சி அளிக்கிறது.

குடிநீர் ஆதாரம் பாதுகாப்பு

மேலும் இந்த குளத்தின் முன்பகுதியில் தடுப்பு பகுதியில் இருந்து தண்ணீர் நிரம்பி அருவி போல் கொட்டி வெளியேறுகிறது. இதனால் இப்பகுதி கிராம பொது மக்களின் குடிநீர் ஆதாரம் வழக்கம்போல் இந்த ஆண்டும் பாதுகாக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இப்பகுதியில் ரத்தினபுரி குளத்தின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், உபரி நீர் நிரம்பி வெளியேறுவதாலும் விவசாயிகள், கிராம பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்