குளச்சல் போர் வெற்றி தினம்: நினைவுத் தூணுக்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம்
|டச்சு படையை வென்ற 281-ம் ஆண்டு போர் வெற்றி தினத்தை முன்னிட்டு குளச்சல் போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் வீர வணக்கம் செலுத்தினர்.
குளச்சல்,
குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது குளச்சல் துறைமுகம் சிறந்த வர்த்தக தலமாக விளங்கியது. இதனை அறிந்த டச்சு படையினர் குளச்சல் துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டனர்.
இதனை அறிந்த திருவாங்கூர் மகராஜா மார்த்தாண்ட வர்மா கொல்லம் முற்றுகையை கைவிட்டுவிட்டு, வேணாட்டின் தலைநகரம் கல்குளம்(இன்றைய பத்மாநாபபுரம்)வந்தார்.
பின்னர் படை தளபதிகளுடன் குளச்சல் கடற்கரை சென்றார். திருவிதாங்கூர் படையினருக்கும் டச்சு படையினருக்கும் கடுமையான சண்டை நடந்தது. 2 மாதங்கள் நடந்த இந்த சண்டை 1741 ஜூலை 31-ம் தேதி முடிவுக்கு வந்து திருவிதாங்கூர் படை டச்சு படையை வென்றது.
கடற்கரையில் மாட்டு வண்டியில் பனை மரங்களை சாய்த்து பெரிய பீரங்கி போன்று மன்னர் மார்த்தாண்ட வர்மா தந்திரம் செய்து டச்சு படையினரை சரணடைய செய்ததாக செவி வழி கதைகள் கூறப்படுகிறது. இதற்கு குளச்சல் மீனவர்கள் மன்னருக்கு பெரும் உதவிகள் செய்தனர்.
இந்த போர் வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித்தூண் ஒன்றை நிறுவினார். இந்த தூண் மீது அமைந்துள்ள சங்கு சக்கரம்தான் இன்றும் குளச்சல் நகராட்சியின் முத்திரையாக உள்ளது.
குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த போர் வெற்றி தூண் வளாகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. போர் வெற்றியை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போர்க்காட்சிகளை விளக்கும் சுவரில் படைப்பு சித்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வெற்றித்தூணில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் (திருவனந்தபுரம் பாங்கோடு)சார்பில் கடந்த சில வருடங்களாக ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த போர் வெற்றியடைந்து நாளை 281-வது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மெட்ராஸ் 11-வது ரெஜிமெண்ட் சார்பில் வெற்றி தூணில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திருவனந்தபுரம் பாங்கோடு கமாண்டர் பிரிகேடியர் லலித்சர்மா, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவவரம் ,ஓய்வு பெற்ற பிரிகேடியர்கள் ஓ.பி.கே.பிள்ளை, அருமைராஜ், டி.ஆர்.ஓ.சிவப்பிரியா, முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை உதவி இயக்குனர் ஸ்ரீனிவாசன், குளச்சல் டி.எஸ்.பி.தங்கராமன், நகராட்சி ஆணையர் ஜீவா, குளச்சல் பங்குத்தந்தை டைனீசியஸ், ஆகியோர் வெற்றித்தூணுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
இதில் கல்குளம் தாசில்தார் வினோத், குளச்சல் மறை வட்ட முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, விசைப்படகு சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், கவுன்சிலர்கள் ஷீலா ஜெயந்தி, ஜாண்சன், சந்திரயோலா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.