திருச்சி
மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு பாராட்டு
|மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மதுரை ரைபிள் கிளப்பில் கடந்த ஜூலை மாதம் நடந்த 48-வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியிலும், இந்திய தேசிய ரைபிள் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் கடந்த 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடந்த 14-வது தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டியிலும், திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்கள் 54 பேர் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உள்ளிட்ட 13 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் 24 துப்பாக்கி சுடும் வீரர்கள் 14-வது தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 13 துப்பாக்கி சுடும் வீரர்கள் 66-வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி 2023-க்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்கள் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு நேற்று முன்தினம் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன் முன்னிலையில், திருச்சி ரைபிள் கிளப்பின் தலைவரும், திருச்சி போலீஸ் கமிஷனருமான காமினி தலைமையில் நடைபெற்றது. பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன் மேற்படி போட்டியில் கலந்து கொண்டு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். விழாவில் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.