பெரம்பலூர்
ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு
|ஐ.ஐ.டி.யில் தேர்ச்சி பெற்ற ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் பிளஸ்-2 முடித்த மாணவி எஸ்.மதுரா. இவர் மத்திய அரசின் 4 ஆண்டு ஆசிரியர் பட்ட படிப்பிற்கான தேசிய அளவிலான என்.சி.இ.டி. 2023-ம் ஆண்டிற்கான நுழைவு தேர்வில் அகில இந்திய அளவில் சிறந்த மதிப்பெண்ணை பெற்று இம்மாவட்டத்தில் தேர்ச்சியடைந்த முதல் மாணவி என்ற பெருமையுடன், இப்பள்ளிக்கு புகழ்சேர்த்துள்ளார். மேலும் இவர் பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (சி.யு.இ.டி.), ஜே.இ.இ. நுழைவு தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது என்.சி.இ.டி. நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் மாணவி மதுராவிற்கு ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ஐ.ஐ.டி.யில் படிக்க இடம் கிடைத்துள்ளது. சாதனை படைத்த மாணவி மதுராவை பள்ளியின் தாளாளர் ராம்குமார் நேரில் அழைத்து பாராட்டி இனிப்பு வழங்கினார். அப்போது பள்ளியின் அகாடமிக் பொறுப்பாளர் கே.கே.கார்த்திக், மாணவியின் பெற்றோர் சக்திவேல்-ராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். மாணவி மதுரா இப்பள்ளியில் நடத்தப்பட்ட ஒலிம்பியாட் தேர்வில் சிறந்த மதிப்பெண்ணை பெற்று, அவர் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கட்டணமின்றி படித்து முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.